ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பான மசோதா நிறைவேற்றம்
ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பல நூற்றாண்டுகளாக வாழும் பழங்குடியின மக்கள் அபோரிஜின்ஸ் (Aborigins)எனப்படுவர். இவர்களுக்கு இதுவரை அரசியலமைப்பு ரீதியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தேசிய கொள்கை வகுப்பில் எந்த பங்களிப்பும் இன்றி இருந்து வருகின்றனர்.
அதை மாற்றும் முயற்சியின் முதல்படியாக, பழங்குடியின மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் மக்களுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கவேண்டுமா? என்பதை தீர்மானிக்க அந்நாட்டு மக்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு பாராளுமன்ற மேலவையான செனட் சபையில் நடந்த இறுதி வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 52 பேரும் எதிராக 19 பேரும் வாக்களித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் மக்களை பாதிக்கும் விஷயங்களில், பாராளுமன்றத்திற்கு ஆலோசனை வழங்கக்கூடிய "பாராளுமன்றத்திற்கான குரல்" என்ற ஒரு ஆலோசனை குழுவை அமைப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை ஆஸ்திரேலியர்கள் ஆதரிக்கிறார்களா, இல்லையா என இந்த வாக்கெடுப்பின் மூலம் மக்களிடம் கேட்டறியப்படும்.