எத்தியோப்பியாவில் பட்டினியால் 700 பேர் உயிரிழப்பு!
எத்தியோப்பியாவின் வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் பட்டினியால் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் உணவு உதவியை இடைநிறுத்திய பின்னர், பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவும், ஐநாவும் டைக்ரேவிற்கு உணவு உதவியை நிறுத்தின. இதனையடுத்து ஜுன் மாதத்தில் ஏனைய பகுதிகளுக்கான உணவு விநியோகத்தையும் நிறுத்தியுள்ளனர். இதனால் ஆறில் ஒருபகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் குழந்தைகள், முதியவர்கள், அடிப்படை சுகாதார நிலைமைகளை கொண்டவர்களே உயிரிழப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டைக்ரேயில் உள்ள 6 மில்லியன் மக்களில் 5.4 மில்லியன் மக்கள் உணவு உதவியை நம்பியிருந்தனர். சமீபத்தியமோதலின் போது, இரு தரப்பினரும் மனிதாபிமான பொருட்களை சூறையாடியதால், அரசாங்கம் உதவி அணுகலை தடை செய்தது. இதனையடுத்து மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.